விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில தலைவர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கை
100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த குமரி வாலிபர்
விரைவான விசாரணையும், கடுமையான தண்டனையுமே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்! - விமன் இந்தியா மூவ்மெண்ட் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
****************************
இதுதொடர்பாக விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில தலைவர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து நாள்தோறும் பெண் பாலியல் பலாத்காரம், பெண்களை ஏமாற்றி பணம், நகைபறிப்பு, காதலில் சிக்கிய இளம்பெண் தற்கொலை என செய்திகள் வந்துகொண்டே இருந்த நிலையில், பொள்ளாச்சியில் மனித மிருக கும்பல் ஒன்று தொடர்ச்சியாகப் பல பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்தும், அவர்களை வீடியோ எடுத்து மிரட்டியும் மனிதக் குலத்துக்கே விரோதமான மிக மோசமான செயலை மேற்கொண்ட செயல் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதுபோன்ற நெஞ்சை பதறச்செய்யும் நிகழ்வு மீண்டும் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த காசி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் படித்த பட்டதாரி பெண்கள், பள்ளி மாணவிகள் மற்றும் வசதி படைத்த பெண்களிடம் நட்புடன் பழகி, அவர்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் பறித்து வந்துள்ளார். காவல்துறை விசாரணையில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இந்த மனித மிருகத்தால் சீரழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், காவல்துறை விசாரணையில் பல அரசியல் பிரமுகர்களும் அவரிடம் தொடர்பில் உள்ளது குறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற மனித மிருகங்களால் பெண் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஒருவித அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் அத்துமீறல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, இந்த வழக்கை சி.பி.ஐ. மூலம் விசாரணை செய்ய வேண்டும். குற்றவாளியும், அவருடன் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இதுபோன்ற வழக்குகளில் விசாரணை விரைவாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் போது தான், அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும். ஆனால், பொள்ளாச்சி விவகாரத்தில் ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீதான விசாரணை மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகின்றது.
பொள்ளாச்சி விவகாரம் போன்று இந்த விவகாரமும் ஊடகக் கவனம் பெற்றுள்ள காரணத்தால் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஊடகக் கவனம் இருக்கும் வரை வழக்கை விரைவாக கொண்டு செல்வதும், ஊடகக் கவனம் விலகும்போது வழக்கை நீர்த்துப் போகச் செய்வதும் சரியல்ல. பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான வழக்கின் நிலைமை அவ்வாறு தான் உள்ளது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தி பின்புலத்தில் உள்ளவர்கள் அனைவரையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
குற்றவாளிகளை உடனடியாக தொடர் விசாரணைக்கு உட்படுத்தி சட்டங்களின் ஓட்டைகளாலும், பணம், மற்றும் அரசியல் பலங்களால் தப்பித்து விடாமல், மொத்த குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனைவரை அளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாலே இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது தவிர்க்க முடியும். தாமதமில்லாத சரியான நீதி மக்களுக்கு நீதியின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
ஆகவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, பெண்களின், பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும், பெற்றோர்களின் அச்சத்தையும் போக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும் பட்சத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்களை திரட்டி மிகப்பெரும் அளவில் போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.