நெல்லை மாநகராட்சி சார்பில் வாகனங்கள் மூலமாக காய்கறிகளை தெருக்களில் கொண்டு கொடுக்கும் திட்டம்...
கடந்த 31ம் தேதி நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து டெல்லி சென்றுவந்த 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து நெல்லை மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலம் முற்றிலும் தனிமைபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேலப்பாளையத்திற்குள் செல்லும் அணைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெருக்களில் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுவதாக மேலப்பாளையத்தை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி சார்பில் வாகனங்கள் மூலமாக காய்கறிகளை பொதுமக்களுக்கு அந்தந்த தெருக்களிலேயே கொண்டு கொடுக்கும் திட்டம் சமூக ஆர்வலர்களின் ஓத்துழைப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேலப்பாளைய மண்டல உதவி ஆணையாளர் சுகி பரிமளா, லெனின் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், சமூகநல அமைப்புகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.