வல்லநாடு காசநோய் பிரிவு 10-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவி...
வல்லநாடு காசநோய் பிரிவு 10-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது...



தேசிய காசநோயற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் தலைமை தாங்கினார்கள். வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் *டாக்டர்.ச.செல்வகுமார்* அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
வல்லநாடு சித்த மருத்துவ மருந்தாளுநர் *திரு.சி.வெங்கடேசன்* அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வட்டார மருத்துவ அலுவலர் *டாக்டர்.மு.சுந்தரி* அவர்கள் காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், வல்லநாடு காசநோய் பிரிவில் கடந்த 9 ஆண்டுகளாக காச நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மூலம் வழங்கப்பட்டு சிகிச்சை காலம் முடியும் வரை காசநோயாளிகள் மிகச்சிறப்பாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
கருங்குளம் வட்டாரத்தில் சிகிச்சை எடுக்கும் அனைத்து காசநோயாளிகளுக்கும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்திட சிகிச்சை காலங்களில் சத்தான உணவுப் பொருட்கள் உட்கொள்ள வேண்டும் என்பதற்காக
*நிக்ஷை போஷன் யோஜனா* திட்டத்தின் கீழ் 2018 ஏப்ரல் முதல் மாதந்தோறும் *ரூ.500/-* காசநோயாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. வல்லநாடு சித்த மருத்துவ பிரிவின் சார்பாக காசநோயாளிகளின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்காக நெல்லிக்காய் லேகியம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள *18 வயது முதல் 65 வயது வரையுள்ள* காசநோயாளிகளுக்கு மட்டும் மாதந்தோறும் *ரூ.1,000/-* வீதம் சிகிச்சை காலங்களுக்கு மட்டும் தற்காலிக நிவாரணம் வழங்க ஸ்ரீவைகுண்டம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே முதல் முறையாக அரசுத்துறை மட்டுமல்லாது தனியார் துறையும் ஒருங்கிணைத்து வல்லநாடு காசநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், 2017 ம் ஆண்டு முதல் *திருநெல்வேலி சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவியர்கள் சங்கம்* சார்பாக கிறிஸ்துமஸை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக காசநோயாளிகளுக்கு சத்துணவு, புத்தாடை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வருகிறார்கள்.
2020 ம் ஆண்டு முதல் *சென்னை AAA இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் & கன்ஸ்ட்ரக்சன்* நிறுவனத்தின் சார்பாக புனித ரமலான் நோன்பை முன்னிட்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு அரிசி,பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வருகிறார்கள். கீழச்சக்காகுடி *ஹெக்சகான் நியூட்ரிசன் (இன்டர்நேஷனல்) பிரைவேட் லிமிடெட்* சார்பாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காசநோயாளிகள் அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் *டாக்டர்.கி.செந்தில்ராஜ்,* இ.ஆ.ப., அவர்களின் சிறப்பு உத்தரவின்படி கொரோனா நிவாரணப் பொருட்களும் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளும் அவ்வப்போது வல்லநாடு காசநோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்கள்.
இறுதியாக பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் *திரு.மு.வேம்பன்,*
அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* அவர்கள் செய்திருந்தார்.