வல்லநாட்டில் கிறிஸ்துமஸ் புத்தாண்டை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டது...




வல்லநாட்டில் கிறிஸ்துமஸ் புத்தாண்டை முன்னிட்டு காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் ஓய்வு பெற்ற சாரா தக்கர் கல்லூரி பேராசிரியர்கள், சாரா தக்கர் கல்லூரி முன்னாள் மாணவியர் சங்கம் இணைந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் காசநோய் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்புரை ஆற்றினார்.
சாரா தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் சாரா தக்கர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கத்தின் சார்பாக ஏழை காசநோயாளிகளுக்கு சத்துணவை துணை இயக்குநர் சுந்தரலிங்கம் வழங்கினார்.
அதன்பின்னர் அவர் பேசுகையில், வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட காசநோயாளிகளுக்கு நான்கு ஆண்டுகளாக சத்துணவு, புத்தாடை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி. காசநோயை ஒழிக்க அரசு துறை மட்டுமல்லாமல் தனியார் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் 2025க்குள் காசநோயில்லா தூத்துக்குடி மாவட்டம் உருவாகும் என அவர் பேசினார்.
அரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன், மருத்துவமனை பணியாளர்கள் வேம்பன், செல்லப்பா, சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.