top of page

மழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்களுக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகள் - TNEB


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருநெல்வேலி மண்டலம் தலைமைப் பொறியாளர் (பகிர்மானம்), பொறியாளர் கி.செல்வகுமார், ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்அதில்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் தற்போது நிலவும் வழிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக தென்மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு (01.10.2021 முதல் 04.10.2021 வரை) இடி மின்னலுடன்; கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


மழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொதுமக்களுக்கு கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
1. காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.

2. மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


3. இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள், மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். கான்கீரிட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள்.


4. இடி, மின்னலின் போது, “டி.வி” மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது.


5. மின் மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.


6. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை அறவே தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


7. மேலும் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும்.


8. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் மேல் நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும்.


9. மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.


10. மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து கட்டிடங்களிலும் மின்; கசிவு தடுப்பான் கருவியை (RCCB) மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் பொருத்த வேண்டும். மின்; கசிவு தடுப்பான் கருவியானது பழுதான மின் சாதனங்களை இயக்கும் பொழுது ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து மின் விநியோகத்தை உடனடியாக நிறுத்தி மின் விபத்துக்களை தவிர்த்திட ஏதுவாக இருக்கும்.


11. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும், மேலும் மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சம்பத்ப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படும்.


12. மின் இணைப்புகள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் மின்பழுதுகள் தொடர்பான புகார்களுக்கும், இயற்கை இடர்பாடுகளின் போது அவசர உதவிக்கும் மற்றும் மின்விநியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் “மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையம்” எண் 94987-94987 ஐ 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.


பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து மின்சார விபத்துக்களை தடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருநெல்வேலி மண்டலம் தலைமைப் பொறியாளர்(பகிர்மானம்) திருநெல்வேலி.

தலைமைப் பொறியாளர் (பகிர்மானம்), பொறியாளர் கி.செல்வகுமார் தெரிவித்துள்ளார் .


41 views0 comments
bottom of page