திருவிழா, தேரோட்டம் மற்றும் சப்பர பவனி நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்....

திருவிழா காலங்களில் தேரோட்டம் மற்றும் சப்பர பவனி நடக்கும் நேரங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார் அவர்களின் செய்தி குறிப்பில்
கடந்த 27.04.2022 அன்று தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர்
திருவிழாவின்போது மின்விபத்து ஏற்பட்டு 11 நபர்கள் உயிரிழந்த சோக சம்பவம் மிகவும்
வருந்தத்தக்கது. மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துகொள்கிறேன். தேர்த்திருவிழா காலங்களில் மின்விபத்துக்களை தவிர்க்க
கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என
அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. தேரோட்டத்தின் போது தேரோடும் வீதிகளில் மின்சாரத்தினை நிறுத்திடவும்,
தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்றி பாதுகாப்பாக
தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்யவும் தேரோட்டம் நடைபெறும்
தினத்திற்கு 15 தினங்கள் முன்னதாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை
அணுகி உரிய முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
2. தேரோட்டத்தின் போது சம்பந்தப்பட்ட தேர் அல்லது சப்பரத்தில் ஜெனரேட்டர்
மூலம் அலங்கார விளக்குகள் அமைத்தால் அதற்கு தகுந்த மின் கசிவு தடுப்பு கருவி
(RCCB- Residual Current Circuit Breaker) பொருத்தி அலங்கார விளக்குகளுக்கு
இணைப்பு கொடுக்க வேண்டும்.
3. தேர் அமைக்கும்போது உலோகத்தினால் ஆன கட்டுமானத்திற்கு பதிலாக காய்ந்த
மரக்கட்டைகளில் அமைப்பது பாதுகப்பானதாக இருக்கும்.
4. மேலும் தேரின் உயரமானது அதன் அடிப்பாகத்தின் நீள அகலத்திற்கு
தகுந்தாற்போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. தேரோட்டத்தின்போது தீயணைப்பு மற்றும் முதலுதவி போன்ற அனைத்து
முன்னேற்பாடுகளும் செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்ட பாதுகாப்பு குறிப்புகளை திருவிழா கமிட்டியார்கள் முன்னதாகவே
செய்து பாதுகாப்பாக திருவிழாக்களை கொண்டாடும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்....