வாகன தணிக்கையின் போது"ஸ்மார்ட் காவலர் செயலி" மூலம் திருட்டு வழக்கில் தொடர்புடைய பைக் கண்டுபிடிப்பு
வாகன தணிக்கையின் போது "ஸ்மார்ட் காவலர் செயலி" மூலம் திருடு போன வழக்கின் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பாராமரிக்கவும் தமிழக காவல்துறையில் *"ஸ்மார்ட் காவலர் செயலி“* காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 11.01.2023 அன்று கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நான்கு மூக்கு சந்திப்பில் *பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.ஜீவானந்தம், அவர்கள் தலைமையிலான போலீசார்* வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த வெளியூர் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை நிறுத்தி "ஸ்மார்ட் காவலர் செயலி" மூலம் சோதனை செய்ததில் மேற்படி இருசக்கர வாகனம் மீது சென்னை, K.K.நகர் காவல் நிலையத்தில் திருடு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேற்படி இரு சக்கர வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். *"ஸ்மார்ட் காவலர் செயலி"* மூலம் வாகனத்தை கண்டுபிடித்த கூடங்குளம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், கூறுகையில் *ஸ்மார்ட் காவலர் செயலியில்* சந்தேக நபர்களை அடையாளம் காணவும், காணாமல் போன வாகனங்கள், திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களில் பதிவான வாகனங்களை கண்டுபிடிக்கவும், கெட்ட நடத்தை காரர்களை சோதனை செய்வது, தனியாக வசித்து வரும் முதியோர்களின் இருப்பிடத்தை பதிவேற்றம் செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், குற்ற சம்பவ நிகழ்விடத்தை செயலியில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதன் மூலம் செய்தியினை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் இந்த செயலி உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.