சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நாக்) தரமதிப்பீட்டு அளவீடுகளுக்குத் தயாராவதுகுறித்த கருத்தரங்கம்.

பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் பரமாஷ் திட்டப்படி பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஏழுநாட்கள் தேசியத் தரமதிப்பீட்டுக்கல்விக்குழுவின் (நாக்) தரமதிப்பீட்டு அளவீடுகளுக்குத் தயாராவது மற்றும் ஆவணப்படுத்துதல் குறித்த இணையக் கருத்தரங்கு
செப்டம்பர் 28 முதல் ஏழுநாட்கள் நடைபெறுகிறது.
கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு உறுதிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் செய்யது முகமது வரவேற்றுப் பேசினார். கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி இணையக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் மு. முகமது சாதிக் கருத்தரங்க அறிமுகவுரையாற்றினார். அரசுதவி பெறா பாடங்களின் இயக்குநர் முனைவர் அப்துல்காதர் வாழ்த்துரை வழங்கினார். அறிவியல் புல முதன்மையர் முனைவர் சே.மு.அப்துல் காதர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்திப் பேசினார்.
இந்திய அகத்தர மதிப்பீட்டு உறுதிக்குழுவைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் அயுப் மகபூப் சேக், சங்க்வி பாபுராவ்ஜி கல்லூரிப் பேராசிரியர் சத்தியஜித் காங்குடோ, சோலாப்பூர் டிஏவி கல்லூரிப் பேராசிரியர் தீபக் நானாவாடே ஆகியோர் உரைகள் வழங்கினர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், அண்ணா பல்கலைக்கழக சிடிடிடி இயக்குநருமான பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் பாஸ்கர் இணையக் கருத்தரங்கில் சிறபுரையாற்றும்போது,
“ 2017 ஆம் ஆண்டுமுதல் நாக் எனும் தேசியதரமதிப்பீட்டுக் கல்விக்குழுவின் (நாக்) தரமதிப்பீட்டு அளவீடுகள் பெருமளவு மாற்றம் கண்டுள்ளன. இனிவரும் காலங்களில் நாக் மதிப்பீட்டு மதிப்பெண், குறைந்த பட்சம் 2.5 ஆவது பெற்றிருக்க வேண்டும். எழுபது விழுக்காடு மதிப்பெண்கள் கல்லூரிகள் தரும் தரவுகளின் அடிப்படையிலும் முப்பது விழுக்காடு குழுவின் நேரடி ஆய்வின் அடிப்படையிலும் நாக் மதிப்பீட்டுக்குழுவால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. கற்றல் கற்பித்தல் முறைகள் நவீனமாக இருக்கவேண்டும். மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் பயில விரும்பும் பாடங்களைக் கல்லூரிகள் வழங்கவேண்டும். பிறமாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் உங்கள் கல்லூரிக்கு வந்தால் உங்கள் கல்லூரி தரம் மிகுந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். கொரோனா காலகட்டத்தில் இணையவழிக் கல்வி அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ஸ்வயம் இணையவழிக் கல்வியை நாடெங்கும் உள்ள மாணவர்கள் பயில வாய்புள்ளது. மாணவர்களை மையமிட்ட கற்றல் கற்பித்தல் முறைகளுக்கு நாக் அதிக மதிப்பெண்களை வழங்குகிறது. வகுப்பில் வேகமாகப் பயிலும் மாணவர்களும் மெதுவாகப் பயிலும் மாணவர்களும் இருப்பார்கள். மாணவர்களை நட்போடு நடத்தும் கல்விநிறுவனங்களை நோக்கி அதிக மாணவர்கள் வருவார்கள். கல்லூரிகள் இணையவழியில் கற்க உதவும் நவீன சாதனங்களை அதிகமாக உருவாக்கித்தரவேண்டும். நூலகம் மின்னணுமயமாக்கப்பட்டால் மட்டுமே அதிமாக மாணவர்களை நூல்கள் வாசிக்கவைக்க முடியும். நாடுகள் கடந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.பேராசிரியர் ஆய்வுத் திட்டங்களில் நிதியுதவி பெற்று சமுதாயத்திற்குப் பயன்படும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் பல்துறைத் திறன்களைக் கல்லூரிகள் ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பதன் மூலம் தங்களை மென்மேலும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.” என்று பேசினார். கலைப்புல முதன்மையர் முனைவர் ச.மகாதேவன் நன்றி கூறினார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் பரமாஷ் திட்டத்தில் இணைந்துள்ள திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஏழுநாட்கள் கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு உறுதிக்குழு சிறப்பாகச் செய்திருந்தது.