சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இணையவழிக்கற்பித்தலுக்கான ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டுப்பயிற்சி
பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இணையவழிக் கற்பித்தலுக்கான ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நாளை முதல் ஏழு நாட்கள் நடைபெறுகிறது.
கொரோனா வைரசின் தாக்குதலில் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்துள்ள நெருக்கடியான நிலையில் உயர்கல்வி இணையம் சார்ந்து இயங்கிவருவதைக் கருத்தில் கொண்டு பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் அகத்தரஉறுதிக் குழுவும் (IQAC) முதுநிலை மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சித் துறையும் இணைந்து பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 19.07.2020 முதல் 25.07.2020 வரை ஏழுநாட்கள் ஆசிரியர்களுக்கான இணையவழிக் கற்பித்தல் திறன்மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. செல்பேசிகளின் ஆன்ராய்டு வசதியைக் கொண்டு கூகிள் வகுப்புகளை ஆசிரியர்கள் எவ்வாறு நடத்துவது? கூகள் பார்ம்களை எவ்வாறு உருவாக்குவது? மின் சான்றிதழ்களை எவ்வாறு இணையத்தில் உருவாக்குவது? வீடியோ எடிட்டர்களைக் கொண்டு எவ்வாறு மாணவர்களுக்கு கல்வி வீடியோக்களைத் தயாரிப்பது? விக்கி பக்கங்களை எவ்வாறு உருவாக்குவது? இணையவழியில் எவ்வாறு விவாதக் குழுக்களைஉருவாக்குவது? எனும் தலைப்புகளில் அனுபவம் வாய்ந்த கணினிப் பேராசிரியர் தொடர்ந்து ஏழுநாட்கள் சூம் செயலியின் மூலம் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கிறார்கள்.
தொடக்கவிழா:
இம் மேம்பாட்டு நிகழ்வின் தொடக்கவிழா 19.07.2020 ஞாயிறு அன்று காலை 10 முதல் 11.30 வரை சூம் செயலியில் நடைபெறஉள்ளது. கல்லூரித்தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துத் தொடக்கஉரையாற்றுகிறார். அகத்தரஉறுதிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.செய்யது முகமது வரவேற்புரையாற்றுகிறார்.கல்லூரி முதல்வர் முனைவர் மு.முஹமது சாதிக் தலைமையுரையாற்றுகிறார். அரசுதவி பெறா வகுப்புகளின் இயக்குநர் முனைவர் ஏ.அப்துல்காதர் வாழ்த்துரை வழங்குகிறார். முதுநிலை மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சித் துறையின் தலைவர் முனைவர் ஷாஜூன் நிஷா ஒருவார நிகழ்வின் நோக்கம் குறித்து நோக்கவுரை வழங்குகிறார். அகத்தரஉறுதிக் குழுவின் உதவி ஒருங்கிணைப்பாளர் கலீல் அகமது நன்றி கூறுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் அகத்தரஉறுதிக் குழுவும் (IQAC) முதுநிலை மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சித் துறையும் இணைந்து செய்கின்றன. இத்தகவலை கல்லூரி முதல்வர் முனைவர் மு.முஹமது சாதிக் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
Registration Link : https://forms.gle/sUYkWNZMx61Dwqi39

