வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் சொந்த மாநிலம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - SDPI
ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கியுள்ளவர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய அரசு அனுமதி! - தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
ஊரடங்கு உத்தரவால் வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள், புனித யாத்ரீகர்கள் உள்ளிட்டோர் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள சிறப்புக் குழுவை நியமிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதனடிப்படையில் டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தமிழகம் அழைத்துவர தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாத்தினர் 500க்கும் மேற்படோர் 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டு, அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஆகவே உடனடியாக அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத், சஹாரன்பூர் ஆகிய இடங்களிலும், மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர், ராஜஸ்தான் மாநிலம் தார்வார், ஹரியானா மாநிலம் ஆகிய இடங்களிலும் தமிழகத்திலிருந்து சென்ற தப்லீக் ஜமாத்தினர் ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ளனர்.
அதேபோல் குஜராத் மாநிலம் சூரத், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களிலும் ஆயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சிக்காக சென்ற 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊரடங்கு காரணமாக, போக்குவரத்து வசதியின்றி தவித்து வருகின்றனர்.
ஆகவே, மத்திய அரசின் சுற்றறிக்கை பிரகாரம் சிறப்பு அதிகாரிகளை நியமித்து, ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் விரைவாக தமிழகம் அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.