அன்னமிட்ட கை #நிஜாம் மாமா..facebook பதிவு...

நேற்று முன்தினம் புளியங்குடி நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகள் குமாரவேல் மற்றும் முகேஷ் பற்றி எழுதியிருந்த பதிவு தமிழகமெங்கும் வலம் வந்துவிட்டது..
தாத்தா மற்றும் தாய்க்கும் வந்த கொரோனா தொற்று, பாட்டிக்கும் வந்து, அவரும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.
இரண்டு குழந்தைகளையும் அதே தெருவில் வசிக்கும் அவர்களது பெரியம்மா தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்..
அவர்களின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அந்தக் குழந்தைகளோடு பேசினோம்..
குழந்தைகள் உற்சாகமாகவே இருந்தார்கள்..
5ம் வகுப்பு படிக்கும் முகேஷ் தெளிவாய் பேசினான்.
அம்மா நல்லா இருக்காங்க அங்கிள்.. சீக்கிரம் வந்துடுவாங்க எல்லோரும்.. நான் தம்பியை நல்லா பார்த்துகிடுவேன் என்று தன் மழலை மாறா குரலில் கொஞ்சலாய் பேசினான்.
ஆனால் அவனுக்கு ஒரே ஒரு வருத்தம்..அவனது பள்ளியில் ஆண்டு விழா நடக்கும் என்று சொல்லியிருந்தார்களாம்..அதற்காகப் புது டிரெஸ் எல்லாம் எடுத்தாச்சாம். ஆனால் திடீரென்று பள்ளிக்கு விடுமுறை விட்டதினால்..ஆண்டு விழா நடக்கவில்லையாம்.. அது எப்ப நடக்கும் அங்கிள்? எப்படியாவது அதை நடத்த சொல்லுங்க.. இல்லைன்னா அடுத்த வருஷம் வேற ஸ்கூலுக்கு ஆறாம் வகுப்பிற்கு சென்றுவிடுவானாம்.. எடுத்த டிரெஸை எப்படி போடுவது?
மனசு சட்டென்று நிம்மதியாச்சுது..
பிள்ளைகள் பெரியம்மாவின் பாதுகாப்பில் பத்திரமாய் இருக்கின்றார்கள்..
தினமும் நகராட்சி பணியாளர்கள் வந்து கவனிக்கின்றார்கள்..
அது போதும்..
அவர்களது தாயார்..தாத்தா..பாட்டி விரைவில் குணமாகி வீட்டிற்கு வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை வந்தது..
ஆனால்..
காலையில் எழுந்ததுமே இன்னோரு சேதி வந்து தாக்கியது..
புளியங்குடியில் கொரோனாவால் பாதித்தவர்கள் நேற்று முன்தினம் 23 பேர் என்றிருந்தது இன்று காலையில் 28 ஆகிவிட்டது..
அதில் இரண்டு பேர்..5 வயது குழந்தைகள்..
தாய்க்கோ தந்தைக்கோ தொற்று அறிகுறி இல்லை..
ஆனால் குழந்தைக்கு மட்டும் தொற்று..
இது எப்படி நிகழ்ந்தது என்பது புரியவே இல்லை..
மனசு மறுபடியும் கலங்கிவிட்டது..
5 வயது குழந்தைக்கு கொரோனா வந்துவிட்டால்..அதை மட்டும்தான் மருத்துவமனைக்கு கொண்டு போயிருப்பார்களோ என்று..உள்ளம் பதறியது.
குழந்தையின் பெற்றோர் தொலைபேசி எண்ணைத் தேடிப் பிடித்து பேசினால்.. குழந்தையின் தாயார்தான் எடுத்துப் பேசினார்..
குழந்தையை தனியே அழைத்துச் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் முடிவு செய்து, தாயாரையும் சேர்த்தே அழைத்துச் சென்றிருக்கின்றார்கள்..
மனம் சட்டென லேசானது..
குழந்தை சரவணவேல் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) எப்படியம்மா இருக்கின்றான்?
நன்றாக இருக்கின்றான் சார்..
வந்த உடனே எக்ஸ் ரே எடுத்தார்கள்..
மருந்து கொடுத்திருக்கின்றார்கள்..
காலையில் சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றான்..ஒன்றும் பிரச்சனை இல்லை சார்..
நல்லது..என்ன சாப்பிட்டான்?
இட்லி கொடுத்தார்கள் சார்..
எத்தனை இட்லி சாப்பிட்டான்?
இரண்டு..
இரண்டா? போதுமா அவனுக்கு? சரி, நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்?
..
சற்று தயங்கினார் தாயார்..
..
ஏன்..? நீங்கள் எதுவும் சாப்பிடலையா?
இல்லை சார்.. சாப்பிட்டேன்..வார்டுக்கு வெளியே யாரும் செல்ல முடியாதல்லவா? அதனால் தம்பிக்கு நாலு இட்லி கொடுத்தார்கள்.. அதில் அவன் இரண்டு..நான் இரண்டு சாப்பிட்டேன்..
ஓ..மை காட்..
மருத்துவமனையில் நோயாளிகள் பெயர் வாசித்து உணவுப் பொட்டலம் கொடுத்திருக்கின்றார்கள்..
தாயார் பெயர் அதில் இருக்காது என்பதால்..அவருக்கென்று தனியே உணவு கொடுக்கப்படவில்லை..
கொடுக்கக்கூடாது என்று மருத்துவமனையில் நினைத்திருக்க மாட்டார்கள்..
நோயாளி குழந்தை என்பதோ.. நோயாளியோடு தாயாரும் உள்ளே இருப்பார் என்றோ உணவு வழங்கும் பிரிவில் யோசித்திருக்கமாட்டார்கள்.. அது அவர்களின் கவனத்திற்கு வந்திருக்காது..
அரசு எந்திரம் ஒரு கடிவாளம் பூட்டிய ஒரு கழுதை..
அந்தக் கழுதைக்கு காகிதம்தான் உணவு..
காகிதங்களில் என்ன எழுதி இருக்கிறதோ.. அதன் அடிப்படையில்தான் அந்தக் கழுதை ஓடும்...
வார்டில் 17 பேஷண்டுகள் இருந்தால் 17 உணவுதான் கணக்கில் வரும்..
ஆகவே அநத கழுதையைக் குற்றம் சொல்ல முடியாது..
அதன் பிறகு அந்த தாயார் பேசியது எதுவும் என் காதில் விழவே இல்லை..
என்ன செய்வது?
எத்தனை நாள் மருத்துவமனையில் தாயார் தங்க வேண்டியதிருக்கும்?
குழந்தைக்கு கொடுக்கப்பட்ட உணவில் சரி பாதியை உண்டுவிட்டு எப்படி இருக்கமுடியும்?
ஃபோனை வைத்துவிட்டேன்..
மனம் அடங்கவில்லை..
நாமோ மருத்துவமனையிலிருந்து 80 கிமீ தொலைவில் இருக்கிறோம்..
என்ன செய்வது?
யோசித்துக் கொண்டே இருக்கும் பொழுது.. சட்டென அந்தப் பெயர் மூளைக்குள் பளிச்சென ஒளிர்ந்தது..
நிஜாம்..
எல்லோராலும் நிஜாம் மாமா என்று அன்போடு அழைக்கப்படுகிறவர்..
நெல்லை மாவட்ட மதிமுக மாவட்டத் தலைவராக இருக்கிறார்..
யாரும் சென்று அவரிடத்திலே போய் உதவி செய்யுங்கள் என்று கேட்கவே வேண்டாம்.. அவர்களுக்கு உதவி தேவைப்படும் என்று தெரியவந்தாலே போதும்.. கேட்காமலேயே ஓடிச் சென்று உதவி செய்பவர்..
ஒருமுறை ஏதோ ஒரு மறியல் ஒன்று பெருமாள்புரம் அருகே நடந்து கொண்டிருந்தது..
நான் அப்போது அந்த வழியாகச் செல்ல வேண்டியதாக இருந்தது..
எனக்குப் பின்பாக ஒரு காரில் நிஜாம் மாமா வந்து கொண்டிருந்தார்..
நான்..கூட்டத்திற்குள்ளாக ஊடுறுவிச் செல்லமுடியாமல் நின்று கொண்டிருந்தேன்..
பின்னால் வந்த நிஜாம் கீழே இறங்கி வந்து என்ன கூட்டம்..என்ன பிரச்சனை என்று விசாரித்தார்..
சற்று நகர்ந்து தன் தொலைபேசியை எடுத்தார்..
நியாயமான கோரிக்கைக்காகத்தான் ஜனங்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்..
ஒரு 250 பேர் இருக்கின்றார்கள்..போராட்டம் முடிந்து போகும் பொழுது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது..உடனே எல்லோருக்கும் பிரியாணி உணவு கொண்டு வந்து கொடு என்று தன் பணியாளருக்கு கட்டளை பிறப்பித்தார்..
அதன்பிறகு..அவர் தன் வண்டியில் ஏறிப் போய்விட்டார்..
அரைமணிநேரத்தில் அங்கிருந்த அத்தனை பேருக்கும் சுடச்சுட பிரியாணி வந்து சேர்ந்தது..
அன்றுதான் நான் அவரை முதன் முதலில் பார்க்கிறேன்..
அவருக்கு நான் யாரென்பது தெரியாது..
அதன்பிறகு இருமுறை சந்திக்க நேர்ந்தது..
அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கி வைத்திருந்தேன்..
அப்படிப்பட்ட மனிதரின் பெயர்தான் இன்றைக்கு நினைவில் வந்தது..