கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா...




கோவில்பட்டி, கே.ஆர்.நகர், நேஷனல் பொறியியல் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் பின்பற்றி நடைபெற்றது. கல்லூரியின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சி.சங்கரநாராயணன், தாளாளர் கே.ஆர்.அருணாசலம், நிர்வாகக்குழு உறுப்பினர் எ.ஷண்மதி, தொழிலதிபர் சி.ராமசாமி, இயக்குநர் முனைவர் எஸ்.சண்முகவேல் மற்றும் முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தி கல்லூரியின் சிறப்பு அம்சங்களை விவரித்தார்.
சென்னை, எக்ஸ்பிடிட்டர் இன்டர்நேஷனலின் இயக்குனர், தமிழ்நாடு அரசின் எதிர்கால தகவல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர், டிஜிட்டல் பர்ஸ்ட் வணிக வளர்ச்சிக்கான எரிபொருள் என்ற நூலின் ஆசிரியர் மற்றும் நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை முன்னாள் மாணவர் கெவின் வால்டர் ஜார்ஜ் தலைமை விருந்தினராகப் பங்கேற்று பட்டங்களை வழங்கி பேசுகையில் பட்டதாரிகள் தனது தொழில்துறை சகாக்கள் என்றும் தொழில்நுட்பத்தின் எதிர்கால தலைமுறை என்றும் குறிப்பிட்டார். பட்டதாரிகள் ஒருவருக்யொருவர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இத்தருணத்தை மகிழ்வுடன் கொண்டாடுங்கள் என்றும் கூறினார். இப்பட்டம் ஒவ்வொரு மாணவரின் மற்றும் அவர்களது பெற்றோரின் கனவு என்றும், பட்டம் பெறுவது மட்டும் சாதனையல்ல, பட்டதாரிகள் தங்களது சொந்த அடையாளத்தை உருவாக்குவது தான் சாதனை என்றும் கூறினார். மேலும், அவர் வாழ்க்கைக்கு ஒரு உதாரணத்தை விளக்கினார் அதாவது (LIFE) என்பது L for Learning, I for Investing, F for Fail Forward மற்றும் E for Excel என்று எடுத்துரைத்தார்.
மேலும், அவர் தன்னுடைய வெற்றி என்பது தான், குடும்பம், சமூகம் ஆகிய மூன்று கோணங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், மேலும் பட்டதாரிகள் வேலையைப் பெறுவதற்கு உதவும் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் ஆளுமை திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பட்டதாரிகள் தமது வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்களாக பொறுமை, ஆர்வம், விடாமுயற்சி மற்றும் செயல்திறன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இறுதியாக, பட்டதாரிகள் தங்களது இலக்கை அடைய வெளி உலகம் ஒரு தடையாக இருக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
விழாவில், 467 மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டங்களையும், 17 மாணவர்களுக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களையும், 7 ஆராய்ச்சி மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களையும் தலைமை விருந்தினர் வழங்கினார். மேலும், பட்டம் பெற்றவர்களில் 35 இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்கள் தன்னாட்சி தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இலட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஏ.ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை மற்றும் அறிவியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதல்வர் ஆகியோரது வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் முனைவர் ஆர்.வி.மஹேஷ்வரி, உதவிப் பேராசிரியர் முனைவர் பி.ரமணன், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் முனைப்புடன் செய்திருந்தனர்.