தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நாள் - பள்ளி குழந்தைகளுக்கு காவல்துறை பணிகள் குறித்து விழிப்புணர்வு...
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.சைலேந்திரபாபு, IPS., அவர்கள், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு நாள் சம்மந்தமாக பள்ளி குழந்தைகளுக்கு குழந்தை பாதுகாப்பு குறித்தும், குழந்தைகளை காவல் நிலையங்களுக்கு அழைத்து சென்று காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும், காவல்துறை பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.



இதன்படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி சரவணன்,(பொறுப்பு) அவர்கள் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அருகில் உள்ள பள்ளி குழந்தைகளை காவல் நிலையங்களுக்கு அழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க அறிவுறுத்தினார்.
இதனை அடுத்து இன்று பாளையங்கோட்டை ரோஸ்மேரி மாடர்ன் பள்ளி குழந்தைகளை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பள்ளி குழந்தைகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன், அவர்கள், வரவேற்று அவர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் பிரிவுகளுக்கு அழைத்து சென்று காவல் துறையின் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.



மேலும் குழந்தைகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், சமூக வலைதளங்களில் தனிப்பட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும், ஆபத்து காலங்களில் பயன்படுத்தப்படும் இலவச குழந்தை பாதுகாப்பு எண்கள் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள் 181, அவசர உதவி எண் 100 மற்றும் காவலன் செயலி ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


பின்னர் குழந்தைகளுக்கு வினாடி வினா போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதேபோல் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பள்ளி மாணவ, மாணவியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் மூலம் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.