top of page

தூத்துக்குடி மாவட்டம் நாணல்காட்டில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்...







2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக ‘காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்” 16.12.2020; நாணல்காடு கிராமத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.மு.சுந்தரி தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலர் டாக்டர்.பிலிப் பாஸ்கர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

இம்முகாமில் சுகாதார குழுவினர் நாணல்காடு கிராமத்தில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்தார்கள். வல்லநாடு சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் அவர்கள் பேசுகையில், காசநோய் காற்றின் மூலம் பரவும் தொற்று நோயாகும். தற்போது ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்நோய் எளிதில் தொற்றிக் கொள்கிறது. பொதுவாக காலை உணவு நமது உடலுக்கு மிகவும் முக்கியமானதாகும், காலை உணவினை சரியான முறையில் சாப்பிட்டாலே காசநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்கள் வராமல் எளிதில் தடுத்து விடலாம் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


இம்முகாமில் சித்த மருத்துவ மருந்தாளுநர் சி.வெங்கடேசன், சுகாதார பார்வையாளர் முத்து லெட்சுமி, செவிலியர் சுப்புலக்ஷ்மி, ஆய்வகநுட்பநர் திருமதி.ஜெமிலா, அங்கன்வாடி பணியாளர்கள் இசக்கியம்மாள், மாரியம்மாள், சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா , செய்திருந்தார்கள்.

6 views0 comments
bottom of page