top of page

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எம். டி.ஆர் டிபிக்கான புதிய சிகிச்சை முறை தொடங்கப்பட்டது...

*எம் டி ஆர் டிபிக்கான புதிய சிகிச்சை முறை அறிமுகம்*




தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்டிஆர் காசநோயாளிகளுக்கான ஊசியில்லா குறுகிய கால சிகிச்சை முறை தொடங்கப்பட்டது.


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காசநோய் பிரிவில் வைத்து நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட காசநோய் துறையின் துணை இயக்குநர் டாக்டர் சுந்தரலிங்கம் முன்னிலை வகித்தார். மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் நேரு தலைமை வகித்து எம்டிஆர் காசநோயாளிக்கு ஊசியில்லா குறுகிய கால சிகிச்சைக்கான மருந்துகளை அளித்து புதிய சிகிச்சை முறையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இச்சிகிச்சை முறை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இச்சிகிச்சைக்கு ஏற்புடைய காசநோயாளி தற்போது கண்டுபிடிக்கப் பட்டதால் இப்புதிய சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டுள்து. இச்சிகிச்சை முறையில் நோயாளிக்கு ஊசிமருந்து செலுத்தப்படாது. ஏற்கனவே இருந்து வரும் எம்டிஆர் சிகிச்சையில் தொடர்ந்து பல மாதங்கள் ஊசி போடப்படுவதால் காசநோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். எனவே, பல ஆராய்ச்சிகளை கடந்து ,ஊசியில்லா சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிகிச்சையில் ஊசிக்கு பதிலாக பிடாகுலின் என்னும் மருந்தானது, மாத்திரை வடிவில் சேர்க்கப்படுவதால் ஊசியினால் ஏற்படும் சிரமம் தவிர்க்கப்படுகிறது. மேலும் நோயாளியின் சிகிச்சை காலம் இரண்டு ஆண்டிலிருந்து 9 மாதமாக குறைக்கப்படுகிறது. மருந்துகளை முழு கால அளவுக்கும் முறையாக எடுக்கும் பட்சத்தில் எம்டிஆர் காசநோயில் இருந்து பூரண குணம் பெறலாம். இலட்சக் கணக்கில் பணம் செலவாகும் இச்சிகிச்சையானது, காசநோயாளி களுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. தவிர, தமிழ்நாடு காசநோய் இறப்பில்லா திட்டத்திற்காக நெஞ்சக நோய் பிரிவில் சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலம் 2025ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க இயலும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமணை துணை கண்காணிப்பாளர் டாக்டர். குமரன், நெஞ்சக நோய் மருத்துவத்துறையின் தலைவர் டாக்டர் சங்கமித்ரா, உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர்.சைலஸ் ஜெபமணி,மற்றும் காசநோய் பிரிவின் மருத்துவர் காதர் முகைதீன் ஷெரிப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காசநோய் துறையின் மேற்பார்வையாளர்கள் செய்திருந்தனர்.

19 views0 comments
bottom of page