நெல்லையில் smartcop செயலி அறிமுகம் - தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது...








கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், திருநெல்வேலி மாநகராட்சி, மற்றும் நெல்லை மாநகர காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதை தடுத்துவருகின்றனர். மேலும் இதை மீறி வெளியே தேவை இல்லாமல் சுற்றுபவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன் வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. தற்பொழுது மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து பொதுமக்கள் வெளியே வருவதற்காக 3 வண்ணங்களில் அட்டை வழங்கியுள்ளது. அதன்படி திங்கள்- வியாழன், செவ்வாய் - வெள்ளி, புதன் - சனி ஆகிய நாட்களில் மட்டும் அதிகாலை 6 மணி முதல் 1 மணி வரை வெளியே செல்ல முடியும். மருத்துவ காரணங்களுக்காக வெளியேசெல்ல எந்த நிபந்தனையும் இல்லை.
அனைத்திற்கும் மேலாக நெல்லை மாநகர காவல்துறை smartcop என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி மூலம் வாகன சோதனை சாவடியில் வாகனத்தின் பதிவு எண், உரிமையாளர் பெயர், ஊர், ஓட்டுநர் உரிமம் எண், வெளியே செல்லும் காரணம், செல்லும் இடம் ஆகியவை பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட நபர் அடுத்த சோதனை சாவடியில் நிறுத்தி smartcop செயலியில் வாகன எண் பதிவு செய்தவுடன் அவரது முழு விபரமும் தெரிய வருவதுடன் அவர் அனுமதிக்கப்பட்ட 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் பயணம் செய்கிறாரா அல்லது அதை மீறி வருகிறாரா என்பது தெரியவரும். அவ்வாறு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. மேலும் பறிமுதல் செய்யப்பட வாகனம் அதற்கென கொடுக்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து 10 நாட்களுக்கு பிறகே திரும்பப்பெறமுடியும்.
இது போன்ற கடுமையான நடவடிக்கைகளைதொடர்ந்து இன்று காலை முதல் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவது வெகுவாக குறைந்துள்ளது. நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் மற்ற நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்படும். அனால் வழக்கத்துக்கு மாறாக இன்று குறைந்த அளவே பொதுமக்கள் காய்கறி வாங்க வெளியே வந்துள்ளனர். இதனால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் கொடுத்த அட்டையில் ஞாயிற்றுக்கிழமை வெளியே செல்ல அனுமதி இல்லாததும், மாநகர காவல்துறையின் புதிய smartcop செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது....