தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...

குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பாலருவி, புலியருவி, பழத்தோட்டஅருவி, சென்பகாதேவியருவி, பழையகுற்றால அருவி, தேனருவி. இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் திருநெல்வேலி வரை தென்படும்.மழைக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூன் மாதம் இறுதியில் குற்றாலத்தில் சீசன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூன் மாத இறுதியில் குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. குற்றாலத்தில் சீசன் தொடங்கிய போதிலும் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பொது மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குற்றாலத்தில் சீசன் தொடங்கி விட்டது என்பதை அறிந்து குளிக்க வர முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏக்கத்தில் உள்ளனர்.