top of page

விழித்திடுங்கள் பொதுமக்களே!!!



கொரோனா என்னும் கொடிய நோய்த்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் 96 நாட்களுக்கும் மேலாக நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட தடுப்பு அரணாக இருந்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், செய்தியாளர்கள், தன்னார்வலர்கள் என ஓய்வு உறக்கமின்றி நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் முதல் நிலை தடுப்பு வீரர்களில் சிலர் தற்பொழுது நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இத்தனை நாட்கள் அவர்கள் தங்களது குடும்பம், குழந்தைகள் என்று எண்ணாமல் பொதுமக்களின் நலனுக்காக பாடுபட்டனர். ஆனால் அரசு உத்தரவுகளை அலட்சியப்படுத்தி தடைகளை தாண்டி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடுவது, அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே சுற்றுவது என பொதுமக்கள் அலட்சியமாக இருந்ததன் விளைவாக நோய்த்தொற்று அதிகரித்தது.


இருந்தபோதிலும் நோய்த்தடுப்பு வீரர்கள் தொடார்ந்து போராடி நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் அலட்சியபோக்கினால் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், செய்தியாளர்கள், தன்னார்வலர்கள், சுகாதார பணியாளர்கள் சிலர் என அடுத்தடுத்து கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தன்னலம் கருதாமல் பொதுநலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு தற்பொழுது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வரும் கொரோனா தடுப்பு வீரர்களுக்கு பொதுமக்களாகிய நீங்கள் எப்படி நன்றி தெரிவிக்கப்போகிறீர்கள்...


இவர்களது தன்னலம் கருதாத சேவைக்கு நன்றி தெரிவிக்க விரும்பினால் நீங்கள் செய்யவேண்டியது ஒன்று மட்டுமே.,.. முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லமாட்டேன், சமூக இடைவெளியை கடைபிடிப்பேன், அத்தியாவசிய காரணமின்றி தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே செல்லமாட்டேன் என உறுதி எடுத்துக்கொண்டு அதை பின்பற்றி நடப்பது மட்டும் தான்.


சி.சரவண ராஜன்,

முதன்மை செய்தி ஆசிரியர்,

www.nellaijustnow.com

13 views0 comments
bottom of page