தமிழக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவி - ஆட்டோ ஓட்ட அனுமதி கேட்டு தமிழக முதல்வரிடம் மனு.

தமிழக அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் நலனை கருத்தில்கொண்டு திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலக ஆட்டோ ஓட்டுனர்கள் நலச் சங்கம் சார்பில்
தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.,அந்த மனுவில்
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்தது முதல் பயணிகள் ஆட்டோ ஓட்ட தடை விதிக்கப்பட்டதால் கடந்த 55 நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள பயணிகள் ஆட்டோக்கள் அனைத்தும் இயக்கப்படாமல் உள்ளது. தற்பொழுது 4 வது கட்ட தடையின்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 55 நாட்களாக தொழில் இல்லாமல் வீட்டில் முடங்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. ஆட்டோ தொழிலை மட்டும் நம்பி குடும்பம் நடத்திவந்த ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்துடன் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் நிலையில் உள்ளனர். தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதுமானதாக இல்லாத நிலையில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுனர்கள் கடந்த 55 நாட்களாக வருமானம் இல்லாமல் மிகவும் சிரமத்துத்துக்குள்ளாகியுள்ளனர். மூன்று கட்ட ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது கட்டத்திலாவது ஆட்டோ ஓட்ட அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நான்காவது கட்ட ஊரடங்கிலும் ஆட்டோ ஓட்ட தடை நீடிப்பது பெரும் ஏமாற்றத்தயும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களின் வறுமையை கணக்கில் கொண்டு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்ட பெர்மிட் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர்களை கணக்கெடுத்து நிவாரண உதவி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் நலிவடைந்த நிலையிலுள்ள பயணிகள் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நான்காவது தடைக்காலத்தில் பயணிகள் ஆட்டோக்களை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இயக்கிட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளாக தமிழக அரசு அறிவிக்கும் விதிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்குவோம் என்று உறுதிகூறுகிறோம். எனவே தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.