முழு ஊரடங்கு காரணமாக தொழில் நலிவடைந்தது தெருத்தெருவாக சென்று டீ விற்பனை செய்யும் ஆட்டோ டிரைவர்...


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவை சேர்ந்த என்.ஜி.ஓ காலனி பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவர் ஆட்டோ ஓட்டுநர். சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியை செய்து வந்தார். மேலும் அதனுடன் சேர்ந்து பூக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். குடும்பத்தை நடத்த போதுமான அளவிற்கு வருமானத்தை ஈட்டி வந்த அவர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் தொழில் நலிவடைந்த நிலையில் சிரமப்பட்டுவந்தார் கையிலிருந்த காசு செலவாகிவிட்டநிலையில் அடுத்தவேளை சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர் ஊரடங்கு தளர்வில் ஆட்டோ ஓட்டுவதற்கு விலக்கு பிறகும் போதுமான அளவு பயணிகள் இல்லாததால் ஆட்டோவும் சரிவர ஓடவில்லை.
ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில், ஜவுளி கடைகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் ஆட்டோக்களை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் யாரும் ஆட்டோவில் செல்ல முன்வரவில்லை. இதனால் ஆட்டோ தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. திருமண மண்டபங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களும் சாத்தப்பட்டு உள்ளதால் பூ விற்பனையும் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. இரண்டு குழந்தைகளுடன் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் இருந்த பரமசிவம் தன்னிடமிருந்த சைக்கிள் ஒன்றில் டீக்கேனை பொருத்தி தெருத்தெருவாக சென்று டீ விற்கும் தொழிலை தொடங்கி உள்ளார். இவர் மட்டுமல்ல தமிழகத்தில் இவரை போல பல்வேறு பரமசிவன்கள் தங்களது தொழில் நலிவடைந்த நிலையில் வேறு தொழில் செய்ய வழியில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்...