வெள்ளுடை தேவதைகள் - மாநகர காவல் துணை ஆணையரின் நெகிழ்ச்சி பதிவு...

இன்று (19-04-2020) காலை திருநெல்வேலி சுலோச்சன முதலியார் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெரியவர் நிலை தடுமாறி கீழே விழுகிறார். என் வாகனத்தை நிறுத்தியவுடன், காவலர் அவரை தூக்கிவிட ஒடுகிறார். எதிர்திசையில் பணிக்காக சென்று கொண்டிருந்த ஒரு சுகாதார பணியாளரும் உதவிக்கு வருகிறார். இடது பக்க கண்ணுக்கு மேலே நல்ல வெட்டு ரத்தம் குபுகுபு என வருகிறது, வெள்ளை நிற கர்ச்சீப் சிவப்பு நிறமாகிவிட்டது. வாகனத்திலிருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து ரத்தத்தை கழுவுகிறோம்.
நான் உடனடியாக வாக்கிடாக்கியில் காவல் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு செல்லப்பாண்டியன் சிலை அருகே நிற்கும் இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பிவைக்க சொல்கிறேன் . அந்த வாகனம் அடுத்த இரண்டாவது நிமிடம் அங்கு வருவதற்குள் ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. இருவரும் சேர்ந்து முதலுதவி செய்து அவருக்கு கட்டு போட்டார்கள் .
முதலுதவி செய்த அந்த மருத்துவ பணியாளரிடம் கட்டுபாட்டு அறையிலிருந்து உங்களுக்கு தகவல் வந்ததா? என்று கேட்டேன்.
இல்லை சார், எங்களை வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் போது ப உங்களது வாகனம் நின்றது, காவலர்களும் நின்றனர், ஏதேனும் விபத்தாக இருக்க போகிறது என நினைத்து 108 வாகனத்தை திருப்பி கொண்டு வந்தோம் என்றார். மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.
என் சின்ன வயதில் எத்தனையோ வெள்ளை உடையனிந்த தேவதை கதைகளை கேட்டிருக்கிறேன் . முதன்முதலாக அதில் ஒருவரை நேரில் பார்த்த திருப்தி . தமிழக சுகாதாரத்துறைக்கு பலமே இவர்களைப் போன்ற பணியாளர்களை என்றால் மிகையல்ல.
என்றும் அன்புடன்
ச.சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்.