தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது! பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - SDPI

கொரோனா ஊரடங்கு நடவடிக்கையை மூன்றாம் கட்டமாக மே 17 வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு உடனடியாக அரசு உதவிக்கரம் நீட்டினால் மட்டுமே மக்களை பசி-பட்டினியிலிருந்து காக்க முடியும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துவரும் சூழலில், அதனைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், கொரோனா பாதிப்பு இல்லாத ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில் (பச்சை மண்டலம்) மதுபானக் கடை, பான் மசாலா கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் எல்லாம் பூட்டப்பட்டிருக்கும் நிலையில், மதுபானக் கடைகளைத் திறக்க வேண்டிய அவசியம் என்ன?
ஊரடங்கு முடக்கத்தால் வேலையில்லாமல் வருமானம் இன்றி ஒவ்வொரு குடும்பங்களும் தவித்துவரும் சூழலில் மதுக்கடைகளை திறக்க அவசியம் என்ன வந்தது?
சமூக இடைவெளியை பின்பற்றி மதுக்கடைகள் திறக்க அனுமதித்துள்ள மத்திய அரசு, மதுபோதை தலைக்கேறிய பின்னர் அவர்களால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியுமா என்பது குறித்து யோசித்து தான் இந்த முடிவை எடுத்ததா?
ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் குற்றங்களும் குறைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், மீண்டும் குற்றச் செயல்களை அதிகரிக்க மதுக்கடைகளை திறந்து வைப்பது தான் சட்டம் ஒழுங்கை பேண வேண்டிய அரசின் மக்கள் நலன் அக்கறையா?
இதுதான் தன்னை கலாச்சாரத்தின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் மத்திய அரசை வழிநடத்துகிற பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸின் நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
மதுபானக் கடைகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தாலும் பூரண மதுவிலக்கை கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ள அதிமுக அரசு இந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுவிலக்கை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் திறக்காமல் இருந்த காரணத்தால், மதுவுக்கு அடிமையானவர்கள் கூட குடியை மறந்துள்ளனர். மதுவை மறக்கும் பயிற்சியை பெறவும் ஊரடங்கு அமைந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
என்று SDPI தேசிய துணைத்தலைவர்
KKSM தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்...